அற்புத நிகழ்வுகள்!

காலம் கடக்க உத்தரவு!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 காலம் கடக்க உத்தரவு!

முன்னுரை

காலம் கடக்க உத்தரவு!

பாப்பா கோயில்

சிறப்பு வாய்ந்த பாப்பா கோயில் என அழைக்கப்படும் நாகப்பட்டினத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் உடனுறை ஸ்ரீ கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோவிலுக்கு ஒரு முறை வாக்குயோகி ஐயா அவர்களும், அவரது நண்பர்களும் சென்றிருந்தார்கள். கோயிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த பொழுது, அந்த நண்பர்களில் ஒருவரான தீபக் என்பவர் அலுவலகத்தில் என்னிடம் பகிர்ந்த உண்மை நிகழ்வு.

தரிசனம் செய்து முடித்து, உடனே திரும்பும் வகையில், சென்ற இந்த நண்பர்கள் குழு வாக்குயோகி அவர்களின் வார்த்தைப் பொருட்டு கோயிலுக்குள் தன் நேரத்தை நீட்டித்தது.

வாக்குயோகி அவர்கள் பூஜாரியிடம் “பூஜை அபிஷேகத்தை சிரத்தையோடு நேரம் எடுத்து செய்யுங்கள், கால அவசரம் வேண்டாம்” என்று சொல்லி இருக்கிறார்.

அந்தத் தருணங்களைத் தாண்டி தயார் நிலையில் கிளம்புவதற்காக இருந்த நண்பர்கள், கார் ஓட்டுனரிடம் புறப்படுவதற்கு நேரம் ஆகும் என்ற செய்தியை சொல்லிவிட்டு பூஜையில் பிரத்யேக கவனம் கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக தண்ணீர் பருகுவதற்காக வாகனத்தின் கதவனை திறந்து மூடும் பொழுது காரின் திறவுகோலை உள்ளே வைத்து ஓட்டுநர் மூடி விடுகிறார். வழக்கத்தை போல வாகனத்தின் கதவு மூடிய உடன், வாகனத்தின் தாழ் சுயமாக வேலை செய்து தாழிட்டுக் கொண்டது. அதனால் ஓட்டுனரின் வியர்வை முயற்சி வீழ்ச்சியில் முடிந்தது!

தகவலை கேட்டறிந்த நண்பர் குழு திகைத்த பொழுது, தெளிந்த முடிவாக வாக்குயோகி “அடுத்த இரண்டு மணி நேரம் இந்த கோயிலுக்குள்தான் இருக்கப் போகிறோம்… வீட்டில் இருப்பவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் சொல்லுங்கள், இரண்டாவது சாவியை எடுத்து வரும்வரை இங்கேயே இருப்போம்” என்றதும் நண்பர்கள் மத்தியில் ஒருவர் “நான் அப்போதே கிளம்பலாம்னு… சொன்னேன்… கேட்டீங்களா…? பூஜையில் மூழ்கிட்டீங்க…” என்று முணுமுணுத்தார்.

இரண்டு மணி நேரம் கழித்து கிளம்பிய கார் சட்டென்று நின்றது. பெட்ரோல் இல்லாமல் இல்லை; ஓட்டுனர் மிதித்ததால். கண்முன்னே பெரிய கனரக வாகனத்தின் காரணமாக இரண்டு கார்கள் பெரிதளவில் விபத்தை சந்தித்து காரின் இரும்பு கூடு நொறுங்கிய வண்ணம் இருந்ததைக் கண்டு, மனம் பதப்பதைக்கச் செய்ததாம்!

நண்பர்களில் ஒருவர் இறங்கிச் சென்று, அருகில் இருக்கும் கடையில் என்ன ஆயிற்று என்று விசாரித்த பொழுது, விபத்தைப் பற்றிய கொடூரத்தை கேட்டறிந்தனர். எப்பொழுது நிகழ்ந்தது என்ற கேள்விக்கு, அந்த கடைக்காரர் சரியாக இந்த நண்பர்கள் குழு முன்னதாக முடிவெடுத்த நேரத்தில் புறப்பட்டிருந்தால், கடந்திருக்கும் அந்த மணித்துளியை சரியாக குறிப்பிட்டாராம்.

நட்பே ஆனாலும் வாக்குயோகியின் ஆன்மீக செழுமையைக் கண்டு, வியந்து, தன் நண்பனை ரசித்த அந்த நண்பர்கள் குழு அந்த ஓட்டுனருக்கும் நன்றி செலுத்தினார்களாம்.

வாக்குயோகி சரீரத்தில் புகுந்து, அந்த ஆஞ்சநேயரே வந்து சொல்லி, காலத்தைக் கடத்தி இங்கு நன்மையை விளைவித்தது போலும் !

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்