அற்புத நிகழ்வுகள்!

பாம்பின் கால் பாம்பறியும்!!!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 பாம்பின் கால் பாம்பறியும்!!!

முன்னுரை

பாம்பின் கால் பாம்பறியும்!!!

சித்தரின் தரிசனம்

வேதாரண்யத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்குப் பயணம்; மோட்டார் சத்தம்; முறுக்கியதும் வேகம் அதிவேகம் ஆகிறது; இரண்டு சக்கர வாகனம்; காற்றைக் கிழித்து சாலையில் சீறிக்கொண்டிருப்பவர், வாக்குயோகி சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்!

சாலைகளின் இரு பக்கமும் வாய்மேடு, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை போன்ற  கிராமங்கள் பல கடந்தன. தலை கவசத்திற்குள் 50 நிமிடங்களுக்கு மேலாக பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு அப்பாற்பட்டு நடக்கப் போவதைப் பார்க்கும் அந்தக் கண்களுக்கு, 50 அடி என்ன? 100 அடி என்ன? 500 அடிக்கு அப்பாற்பட்டு தனக்கு முன்னே நகரும் வாகன சக்கரத்தின் கணிப்பு சுலபம் தானே! எதிலும் வல்லவர்! இதில் மட்டும் என்ன சொல்லவா வேண்டும்?

தன் சித்தத்தில் பரம்பொருளே ஆனாலும், இருப்பது மனித சரீரத்திற்குள். தன் வயிறு “பசி” என்றது, நாவும் “வடை” என்றது. அத்தோடு தேநீர் அருந்த மோட்டார் வாகனத்தின் வாயிலிருந்து திறவுகோல் எடுக்கப்பட்டது.

வந்து போகும்பொழுது வழியில் செல்லும் வழக்கமான தேநீர் கடை; நடந்து செல்லும் வழியில் சித்தர் உருவத்தில் அழுக்கு சட்டை அணிந்த ஒரு வயதானவர்; சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்.

கண் சிமிட்டும் நேரம் அவரைப் பார்த்துச் சென்ற வாக்குயோகி, கடைக்குள் சென்றதும் “ஒரு டீ” என்றார், கண் இமைத்த நேரம், அந்த வயதானவரை நினைத்து உடனே “ரெண்டு டீ…. ரெண்டு வடை….” என்றார்.

கைக்கு வந்த அந்த வடையையும் தேநீரையும், சித்தர் போல தெரியும் அந்த வயதானவரை அணுகி பகிர்ந்துக் கொள்ள “ஐயா சாப்பிடுங்க” என்று கொடுத்தார்.

மற்றவர் கண்களுக்கு ஒரு பிச்சைக்காரன் போலத் தெரியும் அந்த வயதானவர், “பசி உனக்கா…..? எனக்கா….?” என்று சொல்லி, ஆயினும் “சரி…. கொடு… உனக்கும் பசிக்குது…. போ…போ… போய் நீயும் சாப்பிடு….!” என்று கூறினாராம்.

தன் பசியை எப்படி இவர் அறிந்தார் என்ற கேள்வி வாக்குயோகி அவர்களுக்கு. தேனீர் கடைக்கு வந்தால் ருசிக்காகவும் வருவார்கள், பசிக்காகவும் வருவார்கள். எனினும் அவர் கூறிய விதம் உள்ளுணர்ந்து, இயற்கைக்கு ஒன்றிய வார்த்தை என உணர்ந்திருக்கிறார் வாக்குயோகி.

அதைக் கொடுத்துவிட்டு தேநீர் கடையில் தான் உட்கார்ந்த இருக்கையை நாடி வரும் பொழுது, “ஐயா…! வணக்கம்…! யார் ஐயா நீங்க…? நாங்க எல்லாம் எத்தனை தடவை கொடுத்தோம்…. அந்தப் பெரியவர் வாங்கி சாப்பிட மாட்டார்… கடைக்கு வந்தவங்க நிறைய பேர் வாங்கிக் கொடுத்தும்…. இதுவரை அவர் கைநீட்டி வாங்கியதில்லை….. உங்ககிட்ட மட்டும் எப்படி வாங்கினார் என்று தெரியலையே…..?” என்று அந்த கடையில் ஒருத்தர் கேட்க, கடையில் இருக்கும் அனைவரும் வாக்குயோகி அவர்களை அண்ணார்ந்து புதியதொரு மனிதராக பார்த்தார்களாம்!!

மற்றும் ஒரு நாள் என் குடும்பமும், ஐயாவின் குடும்பமும் ஒன்றாகப் பயணித்தபோது; இந்த தேநீர் கடையைக் காண்பித்து, “இப்படி நடந்தது” என்று வாக்குயோகி ஐயா அவர்களே, எங்களிடம் விவரித்த ஓர் அற்புத நிகழ்வு இது!!

இவர் கீழ் ஜாதி; அவர் மேல் ஜாதி; இவர் பணக்காரர்; அவர் ஏழை; இவர் பிச்சைக்காரன்; அவர் முதலாளி; இவன் கோபக்காரன்; இவன் மூடன் என்ற ஏற்றத்தாழ்வுகளை எப்பொழுதுமே வாக்குயோகி ஐயா அவர்கள் வாழ்க்கை இயல்பில் கணக்கிடுவதில்லை.

“சித்தர்களைத் தேடும் பயணத்தில் யாரும் வெற்றிப் பெற்றதாக எனக்கு தெரியவில்லை…! சித்தர்களுடன் தொடர்பு உள்ளவர்கள், சித்தர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்…. தொடர்பு உறுதியெனில்! அவர்களே வந்து கண் முன் தோன்றுவார்கள்!” என்று வாக்குயோகி அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.

“இவர் பிச்சைக்காரர், ஒன்றும் இல்லாதவர், பரதேசி, பைத்தியம் என்று எவரையும் பார்வையின் அடிப்படையில் முடிவு செய்யாதீர்கள்….. அவர்கள் தன் கர்ம வினையினை அதிவேகமாக குறைத்துக் கொண்டிருப்பவர்கள்…. அவர்கள் திருடுவதில்லை….. சில நேரம் பேசுவதுமில்லை….. சில பேர் பசிக்கிறது ஏதாவது கொடுங்கள் என்று கேட்பதும் இல்லை….. இன்னும் சில சித்தர்கள் ஏதோ ஒரு நோக்கத்தைக் கொண்டுக் காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள்…..  முடிஞ்சா உதவுங்க….. இல்ல சும்மா இருங்கய்யா!!” என்று அடிக்கடி வாக்குயோகி அவர்கள் உரைப்பது என் நினைவுக்கு வருகிறது!!!

லோகா சமஸ்தா சுகினோ பவந்து:

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்