அற்புத நிகழ்வுகள்!

பரம்பொருளின் துளியாக தாயுமானவன்!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 பரம்பொருளின் துளியாக தாயுமானவன்!

முன்னுரை

பரம்பொருளின் துளியாக தாயுமானவன்!

நகை திரும்பக் கிடைத்தது

செட்டிநாடு என்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான இடமாகும். சிவகங்கை மாவட்டத்தில் திருமணம் ஆகிய பெண்ணின் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை தவிர மற்றும் ஓர் மாங்கல்யம் “கழுத்திரு” என்று அழைக்கப்படுகிறது. இந்த கழுத்திரு என்ற மாங்கல்யம் ஏறத்தாழ 15 சவரன் கொண்ட தங்கத்தால் ஆனதாகும். முக்கியமான விசேஷங்களுக்கு மட்டும் இந்த மாங்கல்யத்தை அணிவது வழக்கத்தில் இருந்து வருகிறதாம்.

இந்த செட்டிநாட்டைச் சேர்ந்த சந்தனசெல்வி என்பவர் திருமணமானவர்; “கழுத்திரு” என்ற மாங்கல்யத்தை கொண்டவள்; எந்த விசேஷத்திற்கு சென்றாலும், உறவுகளின் முன்னிலையில் இந்த கழுத்திரு மாங்கல்யத்தை அணிவது இவருடைய பழக்கத்தில் இருந்து வந்தது.

பாதுகாப்பு பொருட்டு இந்த மாங்கல்யத்தை வீட்டு விசேஷம் முடிந்தவுடன் தன் தாயார் வீட்டிற்குள் சென்று அந்த கழுத்திரு மாங்கல்யத்தை கழட்டி, தன் தாயார் உடைய பூட்டிய பீரோவுக்குள் வைத்து பத்திரப்படுத்தி வருவதும் வழக்கம்!

ஒருநாள் காலத்தின் கர்ம கணக்கு, குலதெய்வத்தின் அனுமதிக் கொண்டு சந்தனசெல்வியின் தாயாரை சரீர உடலில் இருந்து பிரித்தெடுக்க; 16 நாட்கள் கழித்து காரியம் நடந்து முடிகிறது.

பின்பு மூன்று மாதங்கள் கழித்து தன்னுடைய கழுத்திரு மாங்கல்யத்தை எடுத்துக் கொள்வதற்காக சந்தனசெல்வி அவர்கள் பிறந்த வீட்டுக்குச் செல்கிறார்!

பூட்டி வைத்த அந்த பீரோ பூட்டப்படாமல் இருந்ததைப் பார்த்து, பதறி அதனுள் இருக்கும் அனைத்துப் பொருட்களும் தன் அண்ணனின் மனைவி காந்திமதி வெளியேற்றி விட்டதை அறிந்து, சமையல் அறையில் இருக்கும் அண்ணியைத் தேடி “அண்ணி எப்படி இருக்கீங்க….” என்று பேசத் தொடங்கினாள் சந்தனசெல்வி.

“அண்ணி… என்னோட கழுத்திரு மாங்கல்யத்தை பத்திரமாக வைக்க வேண்டும் என்று அம்மாவின் பீரோவில் வைத்திருந்தேன்…. அதை எடுத்தீங்களா…..? எனக்கு கொடுங்க….” என்று சந்தனசெல்வி, காந்திமதியிடம் ஏக்கத்துடன் கேட்க, காந்திமதி “ஏம்மா!! என் மாமியார் ஓட சொத்து அவர் பிள்ளைக்கு தானே; அப்ப எனக்குதானே சொந்தம், அதெப்படி நீ கேட்கிற” என்று மறுத்து விடுகிறாள்.

“இல்லை அண்ணி…. அது என்னுடையது! அம்மாது இல்ல!” என்று சந்தனசெல்வி எடுத்துச் சொல்ல, “எதற்காக பொய் சொல்கிறாய்…. அந்த விஷயத்தை விடு… என்ன பேசினாலும் தரமாட்டேன்…” என்று உடும்புப்பிடியில் காந்திமதி.

இந்த உரையாடல் நொடிப் பொழுதில் சண்டையாக மாற, காலப்போக்கில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. நாட்கள், மாதங்கள், வருடங்கள் என இந்த கழுத்திரு பிரச்சனை அந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு காதுகளுக்கும் தீராத வலியாக மாறியது.

எப்பொழுதாவது அண்ணி தன்னிடம் கொடுத்திடுவாள் என்ற நம்பிக்கை காற்றில் பறந்துப் போனது. அண்ணி மீது வெறுப்பு முகத்தைக் காட்டியது.

“இது என்ன நியாயம்” என்று காந்திமதி தரப்பு கொந்தளிக்கும் விவாதங்கள்.

நான்கு வருடங்கள் கடந்தன. வேறு வழியில்லை இதற்கு தீர்வு என்ன என்று தேடிச் சென்ற சந்தனசெல்விக்கு பல முயற்சிகளுக்குப்பின், வாக்குயோகி அவர்களைத் தொடர்புக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

மிகுந்த மன வலியுடன், இதைப்பற்றி பேச ஆரம்பித்த அந்த தருணம் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க “கழுத்திரு மாங்கல்யத்தை அண்ணித் தர மறுக்கிறார்கள் ஐயா” என்று கலக்கக் குரலோடு வாக்குயோகி அவர்களிடம் ஆலோசனை வேண்டி விண்ணப்பம் வைத்தார்.

ஜோதிடக் கட்டங்கள் இல்லை; பிறந்த தேதியும் இல்லை; உடனடி தீர்வென “உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற சென்னிமலை முருகன் கோவிலுக்கு, மூன்று எலுமிச்சம் பழம் எடுத்துட்டு போய்…  இரண்டு எலுமிச்ச பழத்தை கோயில்ல செலுத்திட்டு, ஒரு எலுமிச்சம் பழத்தை கையில வச்சுக்கிட்டு, கழித்திரு மாங்கல்யத்தைப் பற்றி முருகனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, மேற்கு திசையை நோக்கி நின்று, உங்க அண்ணிக்கு உடனே போன் பண்ணுங்க. அவங்க என்ன சொன்னாங்க அப்படிங்கறத, எனக்கு போன் பண்ணி சொல்லுங்க….” என்று சொல்லி முடித்தார் வாக்குயோகி அவர்கள்.

வாக்குயோகி அவர்கள் பரிந்துரைத்ததை அப்படியே நிகழ்த்திவிட்டு, மீதமிருக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் வைத்து பிரார்த்தனை செய்து கைப்பேசி மூலம் சந்தனசெல்வி தன் அண்ணியைத் தொடர்புக் கொண்டார்.

புயல் போல வார்த்தைகளை வீசிய அண்ணி திடீரென “உன் பொருள் ஒன்னு… என்னிடம் இருக்கு… வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போயிடு!” என்று சொல்ல சந்தன செல்விக்கு “இந்த பரிகாரம் பலித்து விட்டதே!” என்று திகைப்பு.

உண்மை விளிம்பில் அந்தக் கழுத்திரு மாங்கல்யத்தை தன் கையில் பெற்றபோது, மூன்று எலுமிச்சம் பழத்துக்கு இவ்வளவு சக்தியா!!! இல்லை இந்த வாக்குயோகி அவர்கள் வேறு ஏதும் செய்திருப்பாரா? என்ற பிரமிப்புடன் வாக்குயோகி அவர்களுக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வினை விளக்கி “ஐயா எல்லாம் மாயமா இருக்கு… ஒண்ணுமே புரியல… நாலு வருஷமா கிடைக்காத விஷயம்…. நீங்க சொன்ன ஒரு வார்த்தையில கிடைச்சிடுச்சு…...” என்றார். அதற்கு வாக்குயோகி “நீங்க செஞ்ச பிரார்த்தனை….. அந்த முருகன் காதுல விழுந்துடுச்சு…. அதான் கிடைச்சிடுச்சு” என்று சிரித்தபடி அந்த உரையாடலை முடித்தாராம்.

இந்த அற்புத நிகழ்வினை சந்தனசெல்வி அவர்கள் என்னிடம் சொல்லும் பொழுது என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருக்கெடுத்தது!!!

சந்தனசெல்விக்கு உயிர் நீத்த தன் அம்மாவே, வாக்குயோகி அவர்களின் மூலம் வந்து ஜால வித்தை செய்தது.

அந்தப் பரம்பொருளின் துளியில் உன் தாயும் அடக்கம் என்றேன்!!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்