அற்புத நிகழ்வுகள்!

வான்மதி வரம் கொடுத்தார் சிவன்!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 வான்மதி வரம் கொடுத்தார் சிவன்!

முன்னுரை

வான்மதி வரம் கொடுத்தார் சிவன்!

திருமணம் - நடக்காது என்பார் நடந்துவிடும்

வான்மதி மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ் பட்டம் பெற்றவர்; மருத்துவர் ஆனவுடன் சிறிது பயிற்சிக்குப் பிறகு சொந்தமாக மருத்துவ முகாம் இட்டு இவரை அணுகி வரும் நோயாளிகளின் நம்பிக்கையைப் பெற்றவர்; வாழ்க்கை படகு நகர்ந்து செல்ல இவருக்கு கல்யாண பேச்சு வார்த்தை ஆரம்பித்தது.

இவரது பெற்றோர் பல ஜோதிடர்களை அணுகி, இந்த டாக்டர் பெண்ணுக்கு எப்படிப்பட்ட வரன்களை தேடுவது, எந்தெந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்பதை விசாரிக்க ஆரம்பித்தனர். அவர் அணுகிய ஜோதிடர்களின் மத்தியில் வாக்குயோகி அவர்களும் ஒருவர்.

வாக்குயோகி அவர்களின் கணிப்பில் டாக்டர் வான்மதி அவர்களது திருமணம்     விதிப்படி நிகழ்ந்தேறும், ஆனால் மதிப்படி தடைகள் உண்டு என்று கூறி இருந்தார்.

எண்ணிக்கையில் 30… 40… என பல மாப்பிள்ளை ஜாதகத்துடன் நாட்கள் வேகமாக கடந்தன. பொருத்தம் சரி வந்தால் மணப் பெண்ணை பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு ஏதோ ஒரு குறை; சரி நாங்கள் வீட்டுக்குச் சென்று கலந்துரையாடி விட்டு தகவல் கொடுக்கிறோம் என்று சொன்னவர்கள் திரும்புவதில்லை. பொருத்தங்களைப் பற்றி கவலை இல்லை, திருமணத்திற்கு சரி என்று சொல்லும் மாப்பிள்ளைகளை டாக்டர் வான்மதி அவர்களுக்கு மனரீதி ஒப்புதலின்மை காரணமாக திருமணம் என்னும் வைபவம் கால தாமதமாகிக் கொண்டே சென்றது.

நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் பொழுது டாக்டர் வான்மதி அவர்களது நண்பர்கள் அனைவரும் ஜோடி ஜோடியாக வருவதைப் பார்த்து கண்கள் சந்தோஷப்பட்டாலும், தன் நிலையை உணர்ந்து வருந்துகிற காலம் நீட்டித்துக் கொண்டே இருந்தது.

டாக்டர் வான்மதி அவர்களது நண்பர்கள் மத்தியில் உலவி வரும் பேச்சு “அவள் சென்னையில் புகழ்பெற்ற ஒரு மருத்துவர் என்று பெயர் வாங்கி விட்டாள்; தனக்கென ஒரு கிளினிக் பெரிதளவில் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள்; நிறைய சம்பாத்தியம்; மாளிகை என வீடு; சொகுசு வாகனம்; கூப்பிட்ட குரலுக்கு பணிப்பெண்கள்; உயர் வசதிகள்; மணாளன் மயங்கும் அளவிற்கு அழகுடையவள்; தேக ஆரோக்கியம் சிறந்தவள், பின் ஏன் இவளுக்கு திருமணம் நடக்கவில்லை. இவள் வேண்டுமென்றே நாட்களைக் கடத்திச் செல்கிறாள். இவளுக்கு ஏதோ ஒரு குறை இருக்கிறதோ என்னவோ, எந்த வரன் வந்தாலும் “வேண்டாம்” என்ற ஒரு சொல்லை மட்டும் சொல்கிறாளோ. பகவான் ஸ்ரீ ராமர் வந்தால்தான், திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாள் போல…..” என பலவித கருத்துக்கள்.

ஆழ்ந்த கவலையில் மூழ்கிய டாக்டர் வான்மதி அவர்களது பெற்றோர்கள், திடீரென வாக்குயோகி அவர்களின் கணிப்புதான் சரி என்று அவரை தேடிச் செல்கிறார்கள்.

அப்பொழுது வாக்குயோகி அவர்கள் “அடுத்த மூணு மாசத்துக்குள்ள ஒரு வரன் வரும்… பிடிச்சுக்கங்க….” என்று கூறி தன் இறை சக்தி கொண்ட வாக்கினை கொடுக்க டாக்டர் வான்மதி அவர்களது பெற்றோர்கள் மனநிம்மதியுடன் திரும்பினார்கள்.

சரியாக வாக்குயோகி சொன்னது போல, 68-வது நாளில் தன் மகளுக்கேற்ற தகுதி, அழகு, வசதி, படிப்புக்கு இணையான ஒரு மாப்பிள்ளையின் ஜாதகம் தன் வீட்டிற்கு வருகிறது. இரு வீட்டாரின் பெற்றோர்கள் கைபேசியில் கலந்துரையாடி இருவர் மத்தியிலும் சம்மதம் பொருந்திய புன்னகை வார்த்தைகள்.

மணப்பெண்ணை நேரில் பார்த்த மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளையை பார்த்த வான்மதி அவர்களுக்கும் மணக்கோலம் மனதில் கோலமிட்டது.

இந்த பெண் மருத்துவருக்கு, புத்தகத்தில் படித்திடாத தன் உடலுக்குள் ஏற்படும் மாப்பிள்ளை பற்றிய மின்காந்த அதிர்வலைகள். அந்த நினைவில் அப்படியே சிக்கியிருக்க தன் மனதின் பிடிவாதம். நிச்சயதார்த்த நாள் குறித்ததும் யாரும் அறியாமல் மாப்பிள்ளை உடன் கைபேசியில் நீண்ட இடைவெளி கொண்ட வார்த்தைகள், ஒலியில்லாத பின்னணி இசையுடன், மனதில் காதல் ரசம் சொட்ட வருங்கால கணவனின் உருவம் தன் மனதில் அழியா வண்ணம் அச்சிட்டு ஒரு புது உலகம் படைத்தாள் இந்த மணப்பெண்.

நிச்சயதார்த்த நாள், கோயிலுக்குள் இரு வீட்டாரின் அழைப்பினை ஏற்ற உறவுகளும் நண்பர்களும் சூழ, வரிசைத் தட்டுகள் தயாராகிக் கொண்டிருந்தது. மாப்பிள்ளையின் தகப்பனார் மற்றும் தாயார், கடவுள் சன்னிதானத்தில் பழத்தட்டினை சுவாமிக்கு படைத்து விட்டு வரும் வழியில் மாப்பிள்ளையின் தாயார் குனிந்தெழும் நேரம், கழுத்தில் இருந்து, மாங்கல்யம் எதிர்பாராத விதமாக வரிசைத் தட்டிற்கு அருகே விழுந்து விடுகிறது.

இதைக்கண்ட சுற்றுத்தில் இருக்கும் அத்துணை பேரும் சகுனம் சரியில்லையே என்ற நினைப்போடு “அச்சச்சோ!!!” என சொல்லி மாப்பிள்ளையின் தாயாரை பாவத்தோடு பார்க்க, அந்த தாயார் தன் மனம் கலங்கி, அங்கிருந்து நகர்ந்து சென்று, தன் கணவரை அழைத்து; இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியினை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தி, அன்றைய நாள் டாக்டர் வான்மதி அவர்களுக்கும், அவரது வீட்டாருக்கும் பலத்த சோகத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது.

டாக்டர் வான்மதி அவர்கள் எந்தவித தவறும் செய்யாமல், தன் கை விட்டு சென்ற இந்த குடும்பத்தை நினைத்து தினந்தோறும் வருந்தி, கண்கள் முழுவதுமாக வேர்க்கும் வரை கலங்கிக்கொண்டு இருக்க, அவளது பெற்றோர் வாக்குயோகி அவர்களிடம் தன் மகளுடன் சந்திக்கின்றனர்.

வாக்குயோகி அவர்களிடம் “ஐயா நீங்க சொன்னது போல எல்லாம் நடக்குது. மூணு மாசத்துக்குள்ள…. எனக்குப் பிடித்த மாப்பிள்ளையை பார்த்தேன்!! இவர் தான் கணவன் என்று என் மனசுல விதைக்கவும் செய்துவிட்டேன். நீங்க முன்னாடி சொன்னது போல கல்யாணத்துல தடை வந்திருச்சு….!” என்று கதறி கதறி அழுத வண்ணம் “இப்ப நான் என்ன பண்ணுவேன் ஐயா!!” என்று தோய்ந்த குரலில் கேட்க, அவளது பெற்றோர்கள் நடந்ததை வாக்குயோகியிடம் முழுவதுமாக விளக்கினார்கள்.

வாக்குயோகி அவர்கள் எப்பொழுதும் போல இன்பம் துன்பம் இரண்டுக்கும் சொந்தமில்லை என கண்மூடி இவை அனைத்தையும் கேட்டு, அந்த இடம் நிசப்தம் அடைந்தவுடன், 30 வினாடிகள் கழித்து தன் தலையை ஆட்டியபடி கண்விழித்தார்.

“ஏம்மா! அழுகை வேண்டாம்….. அந்த மாப்பிள்ளை தான் உன்னோட கணவர்….. நீதான் அவருக்கு மனைவி…” என்ற வாக்கினை வான்மதி அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அவரது பெற்றோர்களைப் பார்த்து “நான் உங்களுக்கு கொஞ்சம் நாளுக்கு அப்புறம் போன் பண்றேன்….. அதுவரை காத்திருங்கள்…. கவலைப்படாமல் போய் வாங்க.” என்று கூறினார் வாக்குயோகி அவர்கள்.

ஐந்து வகை பூச்செடியில் ஒரு பூ மலரும் பொழுது, தன் இறை சக்தி கட்டளைகளை முன் வைத்து, தன் தவ வலிமையினால் உறுதியை நிறுவி இரண்டு வாரங்கள் கழித்து டாக்டர் வான்மதி அவர்களது பெற்றோருக்கு வாக்குயோகி அவர்கள் தொடர்பு கொண்டு “இப்ப அதே மாப்பிள்ளை வீட்டார்க்கு போன் போட்டு…. திரும்பவும் திருமணத்திற்கான பேச்சு ஆரம்பிங்க.” என்று கூறினார்.

வாக்குயோகி ஐயா அவர்கள் இப்படி சொல்லிவிட்டார் என்று அளவில்லா சந்தோஷம். மறுபிறவி எடுத்தது போல், மாப்பிள்ளையின் தாயாருக்கு கைபேசி மூலம் வான்மதியின் தாயார் பெரிய எதிர்பார்ப்புடனும், பணிவுடனும் தொடர்புக் கொண்டார். மாப்பிள்ளையின் தாயார் கைபேசி அழைப்பானை தொட்டு தன் காதில் வைத்தவுடன் “எப்படி இருக்கீங்க…….!” என்று வரவேற்றப் படி ஆச்சரியத்துடன் இரண்டாவது முறையாக திருமணத்திற்கான பேச்சுவார்த்தை சமாதானத்தை எட்டியது. இந்த நிச்சயித்த பெண்ணும் மாப்பிள்ளையும் இன்று தம்பதியராக மன மகிழ்வோடு, தன் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் நல்லதொரு வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாற்கடலை கடைந்த போது எதிர்பாராத விதமாக வெளிவந்த ஆலகால விஷம், ஜீவராசிகளுக்கு இப்பூவுலகில் அழிவைக் கொடுத்து விடும் என்பதைக் கேட்ட சிவன்; தன் தொண்டைக்குள் அந்த விஷத்தை தேக்கி வைத்து, இந்த பிரபஞ்சத்தை காத்தருளி; “நீலகண்டன் (நீல = நீலம் = விஷம்; கண்டன் = தொண்டை)” என்று அழைக்கப்பட்டார்.

இதே போல டாக்டர் வான்மதி அவர்களது திருமண உலகினை தன் தவ வலிமையினால், பஞ்சபூத உறவினால் மீட்டெடுத்து அவரை நல்வாழ்வு நல்கிடச் செய்தார்.

இந்த இயற்கைக்கு இவர் பேசாத குரல் எப்படி கேட்கிறது!!!

வான்மதி கேட்டது வரமா! வரம் கொடுத்தது சிவனா! என்று இன்றுவரை வியப்பில் ஆழ்ந்து இருக்கிறேன்.

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்