அற்புத நிகழ்வுகள்!

ஜடாமுடி சிவதாசனின் "சாமி"!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 ஜடாமுடி சிவதாசனின் "சாமி"!

முன்னுரை

ஜடாமுடி சிவதாசனின் "சாமி"!

வாக்குயோகியால் வாக்கைத் துறந்த சாமியார்

சிகா மந்திர வாசகன்; வாக்குயோகி ஐயா அவர்களது சொந்த ஊருக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்; இறை உணர்வில் உயர்நிலையில் இருப்பவர்; ஜடாமுடி வளர்த்த சாமியார்; வாக்குயோகி அவர்களின் இறைத்தன்மையை நன்கு அறிந்தவர்; சூட்சும உடலை குறிக்கும் குறி மேலாக, சிவத்தைக் குறிக்கும் குறி நடுவாந்தரமாக, தரையில் பதித்திருக்கும் இந்த பூத உடலின் குறி கீழாக என்று அந்த ஆல வாயான் திருநீற்றை எந்நேரமும் தன் நெற்றியில் அணிந்திருக்கும் சிவனடியார். விதியின் விளையாட்டினால் நெருக்கடி மத்தியில் தன்னுடைய பேச்சில் பொய்களைக் கலந்து விடுகிறார். அதைக் கேட்டு செயலாக்கத்தில் வீழ்ச்சி அடைந்த எதிர்த்தரப்பினர் எங்கே தவறு நடந்தது என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.

ஜடாமுடி சாமியார் வாக்குயோகி அவர்களை நாடி இவ்வாறு ஆயிற்று என்று விளக்கி, தான் கூறிய பொய்யினை மறைத்து ஆலோசனை வழங்குமாறு தன் கோரிக்கையை வைக்கிறார். தன் கண்களை மூடியபடி இவை அனைத்தையும் தன் செவியில் வாங்கிய வாக்குயோகி அவர்கள் மூடிய கண்களைத் திறந்து “நீங்கள் சொன்னது தவறு, சிறிது காலம் பேசாமல் நாவுக்கு பூட்டுப் போடுவது முக்கியம்” என்று சொல்லி ஜடாமுடி சாமியாரை ஏறெடுத்துப் பார்க்கிறார்.

“என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க” என்று கேட்ட ஜடாமுடி சாமியாருக்கு வாக்குயோகி அவர்கள் “பொய் சொல்லிட்டீங்க, அப்புறம் என்ன.” என்றார்.

தன் வலிமையான இறையாற்றல் சக்தி கொண்டு தான் கூறிய பொய்யினை கண்டுபிடித்து விடுவார் என்ற சந்தேகத்துடன் பேசிய ஜடாமுடி சாமியாருக்கு வாக்குயோகி அவர்கள் உண்மை நிலவரத்தை அறிந்து சொன்னது, இவருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. எனினும் இரு புருவங்களும் மேலோங்கிய நிலையில் பேசாமல் இருக்க சொல்லிவிட்டாரே, என்ன செய்வது என்ற சிந்தனை தலை தூக்கியது இவருக்கு.

இந்தத் தருணங்களை அருகில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்த என்னை, இந்த ஜடாமுடி சாமியார் அவர்கள் தன் வாயில் சதுர் விரல்களைக் கொண்டு மூடி என்னை பார்த்தபடி எழுந்து சென்று விட்டார்.

ஜடாமுடி சாமியார் எழுந்து சென்ற பின் வாக்குயோகி ஐயா அவர்களை பல கேள்விகளோடு நான் பார்க்க, ஐயா அவர்கள் “சந்தர்ப்ப சூழ்நிலையைத் தாங்கி பிடிப்பதற்கு பொய் சொல்றத விட, இவர் பேசாமலேயே இருந்திருக்கலாம்ல…. இதுக்கு மேல என்ன சொல்றது இவருக்கு…. இப்ப மௌனத்திலேயே இருக்கப் போறாரு… சரி அடுத்தவரை வரச் சொல்லுங்க” என்று நகர்ந்துவிட்டார்.

ராமாயணத்தில், தன் தந்தையின் ஒரு சொல்லிற்காக 14 வருடங்கள் வனவாசத்தை மேற்கொண்ட ராமரைப் போல, இந்த ஜடாமுடி சாமியார் சிகா மந்திர வாசகன் அவர்கள் வாக்குயோகி அவர்களின் ஒற்றை சொல்லிற்காக, இன்று 1000 நாட்களுக்கு மேலாக மௌனத்திலேயே இருந்து வருகிறார்.

அவ்வப்போது கைபேசியில் செய்தி உணர்த்து ஒலி(Voice note) மூலம் நான் படிக்கும் இவரது தகவல்களுக்கு நான் எதிரொளிப்பது “ஐயா, வாக்குயோகி அவர்கள் சொன்னதற்காக இத்தனை நாட்கள் ஏன் இந்த கடும் பிடிவாதம்… அப்படி என்ன மௌனத்தில் கண்டீர்” என்றேன்.

அதற்கு அவர் “நான் மௌனத்தில் இருக்கும் இந்த காலமே என் வாழ்க்கையில்; என் சரீர செயல்பாடு; பிறப்பின் நோக்கம்; அந்த நோக்கத்தை நிறைவேற்றும் இந்த இயற்கையின் விதிபாடுகள்; அசையும் மற்றும் அசையாதிருக்கும் அனைத்துமே சிவன் சொத்து; எறும்பாயினும் தன் பிறப்புக்கு நிகரான ஜென்மம்; எதிரே பேசுபவர் அவர் கர்ம வினையால் எப்படி பொம்மை என ஆட்டி வைக்கப்படுகிறார்; ஆத்ம விழிப்புக்கும் கோபம் குரோதம் என்ற பல உணர்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி; எங்கும் நிறைந்திருக்கும் பஞ்சபூத சக்தி என எல்லாவித விழிப்புணர்ச்சியை கொடுத்திருக்கிறது” என்றார்.

“அதெல்லாம் சரி எப்பொழுது மௌனத்தை துறக்கப் போகிறீர்கள்” என்ற கேள்விக்கு ஜடாமுடி சாமியார் அவர்கள் வாக்குயோகி அவர்களை மனதில் நினைத்துக் கொண்டு “மௌன விரதம் தொடங்கி ஏறத்தாழ மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டது…. என் பேச்சில் பொய் கலந்தமைக்கு காலத்தை அறிந்த வாக்குயோகி ஐயா அவர்கள், என் மேன்மைக்காக உத்தரவிட்டது என் ஆன்ம பலத்தை பெரிதும் கூட்டச் செய்திருக்கிறது. சாமி உத்தரவுக் கொடுத்தால் இப்போது கூட மௌன விரதத்தை முடித்துக் கொள்வேன்” என்று தன் பதிலை பதிவு(Text message) செய்து அனுப்பினார்.

ஜடாமுடி சாமியார் அவர்கள் மௌன விரதத்தை ஆரம்பித்த அந்நாள் முதல் இந்நாள் வரை, எப்பொழுது வந்தாலும் வாக்குயோகி ஐயா அவர்களது பாதங்கள் அருகே உட்கார்ந்து கொள்வது இவருக்கு வழக்கம். அப்படி அமர்ந்த பின்னர் சிவனையே பற்றியது போல அந்த நிமிடங்கள் அப்படியே நீட்டிக்கக் கூடாதா என்ற எண்ணத்துடன் வெகு நேரங்கள் கடத்துவதும் இவரது வழக்கத்தில் இருக்கும் ஒரு பழக்கம்.

இப்படி உங்கள் புரிதலுக்கு இந்த நிகழ்வின் தரவுகளை நான் இங்கு பதிவிட்டிருந்தாலும், இந்த ஜடாமுடி சாமியார் வாக்குயோகி அவர்கள் மீது வைத்துக் கொண்டிருந்த அந்தப் பற்றுதலை முழுவதுமாக இந்தத் தலைப்பில் கூறி விட்டேனா என்ற கேள்வி உண்டு.

அன்று மாணிக்கவாசகர் அந்த ஈசன் புகழ் பாடுகிறார்; இன்று ஜடாமுடி சாமியார் இந்த ஈசன் பெயர் கொண்டவரைப் பாடுகிறார்!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்