அற்புத நிகழ்வுகள்!

சித்தர் வழியில் பயணிக்கும் இவரின் ஹிப்னாட்டிச பார்வைகள்!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 சித்தர் வழியில் பயணிக்கும் இவரின் ஹிப்னாட்டிச பார்வைகள்!

முன்னுரை

சித்தர் வழியில் பயணிக்கும் இவரின் ஹிப்னாட்டிச பார்வைகள்!

காவல் அதிகாரியான சித்த வைத்தியர் (முன் ஜென்மத்தில்)

எனக்குத் தெரிந்தவரை வாக்குயோகி அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தைத் தாண்டி எண் கணிதம், வாஸ்து சாஸ்திரம், பிரசன்னம், பஞ்சபட்சி சாஸ்திரம், ரெய்கி, ஹிப்னாடிசம் போன்ற பன்முகத் திறன் கொண்டவராக, பல்வேறு கலைகளில் தன் கால் தடம் பதித்தவர்.

இந்த வேறுபட்ட கலைகளில் ஜோதிடத்திற்கு முன்னர் வாக்குயோகி அவர்கள் ரெய்கி மற்றும் ஹிப்னாடிசம் (Past Life Regression) என்ற கலையில் புகழ்பெற்றவர். இன்று ஜோதிட கலையில் புதைந்து போன பல மர்மமான ரகசியங்களை எடுத்துக் கொண்டு நம்மிடம் சேர்க்கும் இவர் முற்பிறவியில் ஒருவர் என்ன செய்தார்; அவருடைய கர்மாவானது எப்படி இருந்தது என்று ஜோதிடத்தின் மூலம் எப்படி தெரிந்துக் கொள்வது என்ற ஆராய்ச்சியின் அடிப்படை இந்த ஹிப்னாடிச கலையின் மூலம் அவருக்கு கிடைத்த அனுபவமேயாகும். அந்தத் துறையில் நான் கண்ட இரண்டு அற்புத நிகழ்வினை இங்கு அச்சிடுகிறேன்.

அவரது பெயர் திரு கார்மேகம்; அரசுக் காவல் துறையில் முக்கிய பொறுப்பு; சுகமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அரசு சம்பளம்; செய்யும் பணியில் பலத்த அங்கீகாரம்; அன்பான துணைவி மற்றும் அறிவான பிள்ளைகள் என சிறந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பவர். தன் முன்னே இருக்கும் மேஜை மீது இருக்கக்கூடிய அழைப்பானை அழுத்தினால் பணியாளர் ஓடி வந்து “ஐயா என்ன வேண்டும்” என்று தன் தேவையினை பூர்த்தி செய்வதற்காக இந்த அரசு அதிகாரிக்கு அரசு வழங்கிய அதிகாரம் என்ன!!! பலம் என்ன!!! அடேங்கப்பா….

ஒரு நாள் கார்மேகம் அவர்கள் ஏன் இப்படி நடக்கிறது? என்னை மீறிய ஆர்வங்கள் எனக்குள் எப்படி உதிக்கிறது? அதை செயல்படுத்துவதற்கு ஏன் என் மனம் இப்படி முட்டி மோதுகிறது? என்ற பல வினாக்களை கேட்பதற்காக ஹிப்னாடிசத் துறையில் புகழ் பெற்ற திரு. சி. பொதுவுடைமூர்த்தி அவர்களை நாடி வருகிறார்.

அறைக்குள் வரும்பொழுது நிமிர்ந்த நன்னடை, உயர்ந்த பார்வை, அதிகார முறுக்கு, ஆயினும் பணிவோடு ஐயாவை பார்க்க வேண்டும் என்கிறார்.  அவரை எதிர்கொண்ட நான் “ஐயா என்ன விஷயம்” என்று கேட்க திரு. கார்மேகம் அவர்கள் விவரிக்க ஆரம்பிக்கிறார்.

“நான் ஒரு அரசு அதிகாரி; நல்ல வேலையில் இருக்கிறேன்; ஆயினும் எனது 48 வது வயதில் அதாவது 11 மாதங்களுக்கு முன்பாக நீண்ட நாட்களாக சித்த மருத்துவத்தில் இருந்த மோகம், தீராத காதலென சூடு பிடித்து மருத்துவ குணம் கொண்ட இலை தழைகளை தேடி, சித்த மருத்துவ ஆராய்ச்சியில் தீவிரமான வாழ்க்கை என இறங்கி விட்டேன். இன்று சித்த வைத்தியர் என்ற அங்கீகாரத்தையும் மக்களிடையே பெற்று விட்டேன். எந்த குறையும் இல்லாத நல்லதோர் வாழ்க்கையைக் கடந்து வந்த நான் ஏதோ ஒன்றை விட்டுவிட்டேன் என்ற தவிப்போடு இந்த சித்த மருத்துவத் துறையில் காலடி எடுத்து வைத்ததன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை யோசித்து; விடை கிடைக்காமல், தற்போது ஒரு மூலிகை வைத்து செய்து வரும் ஆராய்ச்சி வெற்றி பெறுமா?” எனக் கேட்டு தெரிந்துக் கொள்ள திரு. சி. பொதுவுடைமூர்த்தி அவர்களை நாடி வந்திருக்கிறேன்” என்றார்.

இதைக் கேட்டறிந்த திரு. சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் கார்மேகம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி, “வாருங்கள் உள்ளே செல்லலாம்” என்கிறார்.

அந்த அறைக்குள் நுழைந்ததும் ஒலி மட்டுமில்லை, ஒளியும் இல்லை. பரிபூரண நிசப்தம்; 30 வினாடிகள் கழித்து அந்த அறைக்குள்ளே இருந்த சிறிய விளக்கின் வெளிச்சம் அந்த அறையில் இருக்கும் பொருட்களை கணிசமாக காண்பித்தது. வசதிக்கேற்ப ஒரு சாய்ந்த படுக்கை; அதன் அருகே உள்ள மேஜையில் கார்மேகம் அவர்களுக்கு புரியாத உபகரணங்கள்; அத்தோடு வெள்ளை காகிதங்கள் எழுதுகோலுடன்.

ஐயா அவர்கள் கார்மேகம் அவர்களை அந்தப் படுக்கையில் படுக்கச் சொல்லி கண்களை மூடச் சொல்கிறார். ஐயா அவர்களின் ஹிப்னாடிச கலை ஆற்றலால் கார்மேகம் அவர்களை தன் சுயநினைவைத் தாண்டி ஆழ் மனதிற்குள் பயணிக்கச் செய்கிறார். ஐயா அவர்களின் மெல்லிய குரலில் சாத்வீக கேள்விகளைக் கொண்ட அணுகு முறையில் கார்மேகம் அவர்கள், தன்னுடைய முற்பிறவியில் வாழ்ந்த வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு தரவுகளையும் வரிசைப்படுத்தி, தற்போது அவருக்கு இருக்கும் அனைத்து கேள்விக்கான பதில்களையும் கார்மேகமே கொடுத்து விடுகிறார்.

சிறிது நேரம் கழித்து ஐயா அவர்கள், கார்மேகம் அவர்களை சுயநினைவுக்கு சுலபமாக மீட்டெடுத்து, மருத்துவ நேரம் முடிவாயிற்று என்று கூறி எழுந்து செல்ல, நாங்கள் கார்மேகம் அவர்களை தூக்கத்திலிருந்து கலைப்பதற்காக எடுத்த நூதனமான முயற்சி தோல்வியில் முடிய, ஐயா அவர்களது முகத்தைப் பார்த்தோம்!!

அதற்கு ஐயா “அவரு போன ஜென்மத்துல ஒரு சித்த மருத்துவர்; 48 வது வயசுல சர்க்கரை நோய்க்கு எப்படியாவது மருந்து கண்டுபிடிக்கணும்னு காடு மலைகளைத் தேடி, நோயை தீர்க்கும் அருமருந்தினை கண்டுபிடிச்சிட்டாரு; ஆனா மக்களுக்கு சேர்க்கும் முன்னர் அவர் ஒரு விபத்தில் உயிர் நீர்த்து விட்டார். இந்தப் பிறவியில அதே 48 வயதில் சித்த மருத்துவத்துறையில் சென்ற ஜென்மத்தில் அவர் கண்டுபிடித்து வெளியிடாத வெற்றிகரமான மருந்து, இவருடைய ஆர்வத்துக்கு தூண்டுதலாய் அதே வயதில் அமைஞ்சிடுச்சு. அவருடைய மனசு அடைய வேண்டிய இலக்க அடைஞ்சிடுச்சுன்னு ஒரு நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்; அதனால அவர எழுப்ப வேண்டாம்” என்று கூறிவிட்டு அவருடைய ஆலோசனை அறைக்கு சென்று விட்டார்.

ஐயா அவர்கள் இந்த கருத்தினை பகிரும் பொழுது கார்மேகம் அவர்கள், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும், அவருடைய கண்களில் இருந்து தாரைத்தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

இதே போல ஜெகதீஷ் என்பவர் தன் கையில் எந்த காயமும் இல்லாமல் வலி உணர்வதாகச் சொல்லி, அதற்கானக் காரணத்தை அறிந்து கொள்வதற்காக ஐயாவிடம் நாடுகிறார். தன்னுடைய ஹிப்னாடிச ஆற்றல் மூலம் ஐயா ஜெகதீஷ் அவர்களின் முற்பிறவியில் உள்ள வாழ்க்கையில் அதே வாலிப வயதில் தன் கையை ஒரு இயந்திரத்தின் அறுப்பான் மூலம் வெட்டுண்டு அனுபவித்த அந்த வலியை, இந்த ஜென்மத்திலும் அதே வயதில், அவருடைய மனம் பிரதிபலிக்கிறது என்ற தெளிவான புரிதலை வெளிக்கொண்டு வந்து; ஜெகதீஷ் அவர்களுடைய மனதினை செம்மைப்படுத்தி, அவருக்கு வலியற்றதொரு வாழ்க்கையை வழங்கினார்.

அந்தக் காலத்தில் பல்வேறு கலைகளை தன் வசப்படுத்தி, அட்டமா சித்து வேலைகள் மூலம் தேவைக்கேற்ப நல்வினைகளை விதைத்தவர்கள் சித்தர்கள். அதே சித்தர்களின் வழியில் பல்வேறு கலைகளை தன் வசம் கொண்டு முக்திப் படி அறிந்து, தான் தெரிந்து கொண்ட சூட்சும ரகசியங்களை அந்தந்த கலைகளில் விரும்பியவர்களுக்கு கொடுக்கும் குரு கடாக்ஷம் பெற்ற இந்த வாக்குயோகி அவர்களின் ஆற்றல், மலையென, கடலென, வானமென நமக்கு கிடைத்த அளவற்றதொரு கருணையின் பெருங்கொடை.

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்