அற்புத நிகழ்வுகள்!

துணை நிற்கும் பிரபஞ்ச சக்தி!

- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்

நிகழ்வு தலைப்பு
1 துணை நிற்கும் பிரபஞ்ச சக்தி!

முன்னுரை

துணை நிற்கும் பிரபஞ்ச சக்தி!

வரமாய் வந்த வீட்டு மனை

               “அட்சய லக்ன பத்ததி” இயற்றிய எனது குருநாதர் திரு. சி. பொதுவுடைமூர்த்தி அவர்களுடைய வீட்டில் ஒரு சிறந்த நோக்கத்திற்கான ஹோமம் நடைபெற்று கொண்டு இருந்தது. அழைப்பினை மிகுந்த பாக்கியம் என்று கருதி அவருடைய வீட்டிற்குள் நுழையும் பொழுது ஐயா அவர்களுடைய நெருங்கிய சொந்தங்களும், நெடுங்காலத் தோழமைகளும் அறிமுகம் கிடைத்தது.

கண்கள் கலங்கியது, தீர்க்கமாக!! துன்பப் பிடியில் இல்லை; ஐயா அவர்களது Home ல் “ஹோம” மருத்துவம் என்ற காரணத்தினால். பிரபஞ்ச சக்தி ஒரு சேர ஓரிடத்தில் நிறைந்த தினம்!!

மந்திரங்களோடு ஹோம குண்டத்திலிருந்து அண்ணாமலையாரது கதிர்வீச்சின் வெப்பம் - உடல் முழுவதும் நெருப்பு சக்தியை மீட்டெடுத்து நிறைவு செய்ய, தெய்வீக தாதுக்களும் தாவரங்களும் மேகம் என புகை மூட்டத்தின் வடிவாக எனது நாசியின் வழியில் உள்ளிருக்கும் நீர் சக்தியினை பதப்படுத்திக் கொண்டிருந்தது.

அறிமுகத்தில் ஐயா அவர்களுடைய ஒரு முக்கிய நண்பரான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கலந்துரையாடிய பொழுது நான் தெரிந்து கொண்ட ஒரு அற்புத நிகழ்வைப் பற்றி இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.

கிருஷ்ணமூர்த்தி அவர்கள், அவர் பிறந்த ஊரிலே வீடு, வாசல், தன்மக்கள் எனவும் முன்தெரு பின்தெரு என்று, தன் பங்காளிகளோடு வசித்து வருபவர்.

எல்லா குடும்பங்களிலும் பங்காளிகளுக்கு இடையே இருக்கும் உரிமைப் போராட்டம் அனைவரும் அறிந்ததே!! இவர் ஒன்றும் விதிவிலக்கு இல்லையே. தன் வீட்டின் அருகே உள்ள காலி மனையின் உரிமையாளராக இருக்கும் தன் பங்காளிகள் இடத்தில் இவருடைய பழக்கம் அனுசரிப்போடு இருந்தாலும், அந்த அன்பும் அனுசரணையும் எதிரொளிக்கவில்லை. அந்த காலி மனையை விற்பதற்குத் தயாராக இருக்கும் பங்காளியின் சம்மதம், இவருடைய விண்ணப்பத்துக்கு கிடைக்கவில்லையே! என்ற வருத்தம் இவருக்கு நெடுநாட்களாக இருந்தது.

யாரோ ஒருவர் வாங்கப் போவதை நான் வாங்கினால் என்ன? என்று ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை, பல வருடங்கள் மெனக்கெடுக்கிறார். ஆயினும் இவருக்கு மட்டும் கிடையாது என்கிறார்கள் அவரது பங்காளிகள்.

மனையை பணமாக மாற்ற வேண்டும், ஆனாலும் நாளை பங்காளிகள் கண் எதிரில் அவரைச் சார்ந்த ஒருவர் அந்த மனையை கொண்டாடக்கூடாது என்ற பொறாமை, புகைச்சல் இருக்கும். இன்றும் சில பேர், பொய்யான வாழ்க்கையை பெருவாழ்வு வாழ்வதாக எண்ணி, தன்னை ஏமாற்றிக் கொள்ளும் நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது!

இந்த விஷயத்தில் மனம் தோய்ந்த வாகோடு ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எனது குருநாதர் மற்றும் அவரது நண்பருமான திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களை நேரில் காணும் பொழுது, இந்த மனையை வாங்குவதற்கான சுய எண்ணத்தையும், தன் வீட்டை சற்று பெரிதாக்கும் பயன்பாட்டினை விருப்பமாக தெரிவித்து, பங்காளிகள் தடையினை விவரித்து வருத்தம் கொள்கிறார்.

நம் வாக்குயோகி திரு. சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள் இதைக் கேட்டவுடன் மூன்று வினாடி கழித்து, கழுத்தை நிமிர்த்தி, சிறிதாக தலையாட்டி, கண் திறந்து “அட! அந்த மனை உன் பேர்ல தான்யா எழுதி இருக்கு!! நீ ஒன்னு பண்ணு, வரும் செவ்வாகிழமை அன்னிக்கு நான் சொல்ற நேரத்துல அந்த மனைக்கு போய் – அம்மனையில் மண்ணில் கால் பதிச்சுட்டு வாய்யா. மிச்சத்தை நான் பாத்துக்கிறேன்…” என்று வரம் கொடுப்பது போல் அய்யா கூறியதும், அதை கிருஷ்ணமூர்த்தி அப்படியே கடைப்பிடித்தார்.

அவர்கள் ஐயா அவர்கள் கூறியது போல செய்த பிறகு, சில மாதங்கள் கழித்து, அரசாங்கம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசாணை மூலம் அறிவித்த போது - அந்த மனையின் சொந்தக்காரர்கள் அண்ணன் தம்பி என இரண்டு பேர் மத்தியில் பிரச்சனைகள் மேலோங்கி உடனே விற்க வேண்டும் என்று முடிவெடுத்து கிருஷ்ணமூர்த்தி அவர்களை நோக்கி ஓட்டம் எடுத்திருக்கிறார்கள்.

அடுத்த சில நாட்களுக்குள் அம்மனையின் பத்திரப்பதிவையும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முடித்திருக்கிறார்.

இந்த அற்புத நிகழ்வுக்குப் பிறகு, கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கையில் என்றென்றும் வாக்குயோகி அவர்கள், தன் சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறும் அவர், அன்றிலிருந்து என் குருநாதர் உடைய அறிவுரை இல்லாமல் எந்த ஒரு முக்கியக் காரியத்திலும் ஈடுபடுவதில்லை என்று குருநாதரின் பெருமையை பறைசாற்றினார்.

என்ன சொல்வது!! என் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வை பகிர்ந்து கொள்ளலாம் என்று வாயெடுத்த எனக்கு, இந்த அற்புத நிகழ்வின் கருப்பொருளை சுட்டிக் காட்டும் விதமாக திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவருடைய வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்வை என் செவிக்கு படைத்தது, ஒரே படகில் இருவரும் பயணிப்பதாகும். இன்று நீங்களும் இதைப் படித்ததால் இணைந்துவிட்டீர்கள்.

“நான் பாத்துக்கிறேன்” என்று எனது குருநாதர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள் சொல்வது என்னைப் பொருத்தவரை “பிரபஞ்ச சக்தியே துணை நிற்கிறது” என்று பொருள்!

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


- திருமதி. சாந்திதேவி ராஜேஷ்குமார்